சட்டவிரோதமாக லாரி மற்றும் மினி வேனில் கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாதாகோட்டை புறவழிச் சாலையில் உள்ள கொட்டகையிலிருந்து நாமக்கல்லிற்கு அரிசினை கடத்துவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தாசில்தார் மணிகண்டன், வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜ், மண்டலத் துணை தாசில்தார் செந்தில் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரி, 3 மினி வேன்களில் அரிசி ஏற்றியது அதிகாரிகளுக்கு தெரிந்தது. இதனையடுத்து அதிகாரிகள் லாரி, மினி வேன்கள் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட அரிசியை அரவை ஆலைகளில் குருணையாக அரைத்து, அந்த கொட்டகைக்கு அனுப்பியது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதன்பின் அதை மூட்டைகளில் நிரப்பி நாமக்கல் மாவட்டத்திற்கு கோழி தீவனத்துக்காக அனுப்பி வைக்கப்படுவதும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து அதிகாரிகள் லாரி, மினி வேன் மற்றும் அரிசியை உணவுபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் சம்பவ இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 8 தொழிலாளர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.