சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரிலிருந்து ஆத்தூருக்கு லாரியின் மூலம் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து டிரைவர் உட்பட லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர்கள் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மாயக்கண்ணன், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சதீஷ்குமார், யுவராஜ், கொண்டலாம்பட்டியை சேர்ந்த நாராயணன் போன்றோர் என்பதும், இவர்கள் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு அரிசி மற்றும் லாரியை கைப்பற்றினர். அதன்பின் கைப்பற்றப்பட்ட அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.