சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏ. ஒய்.ஏ.நாடார் சாலையில் லாட்டரி சீட் விற்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் பார்த்ததும் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். இதில் பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வடக்கு அலங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், இவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தப்பி ஓடிய ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோன்று தஞ்சை தெற்கு காவல்துறையினர் நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமாநகரில் பேருந்து நிறுத்தம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வண்டிக்காரன் தெருவில் வசித்து வரும் சரவணன் என்பதும், இவர் லாட்டரி சீட்டு விற்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 200 ரூபாய் மற்றும் செல்போன் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.