மோட்டார் சைக்கிளின் மீது காட்டுப்பன்றி மோதியதால் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் ஆசிர் ஜெய்சன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசீர் ஜெய்சன் ஆவுடையானூரில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்கு மளிகை பொருட்களை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மளிகை பொருளை தனது அக்கா வீட்டில் கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் ஆசிர் ஜெய்சன் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அதன்பின் இவர் ஆண்டிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக திடீரென காட்டு பன்றி ஒன்று வேகமாக சென்று இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த ஆசிர் ஜெய்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆசிர் ஜெய்சின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.