மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகருடன் ஈஷா
அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார்.
இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளை புத்துயிரூட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்கள்
தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகருடன் ஈஷா
அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார். இந்த ஆன்லைன் கலந்துரையாடல் சத்குருவின் 63-வது பிறந்த தினமான 3ஆம் தேதி நடந்தது. கடந்தாண்டு இதே செப்.3-ம் தேதி தான் காவேரி கூக்குரல் இயக்கமும், 2017-ம் ஆண்டு செப்.3-ம் தேதி நதிகளை மீட்போம் இயக்கத்தின் பயணமும் தொடங்கப்பட்டது.இதன் காரணமாக, இந்நாளை ஈஷா தன்னார்வலர்கள் நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதி மரக்கன்றுகள் நட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
மத்திய அமைச்சருடன் கலந்துரையாடல் :
இந்த கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம்
அல்லது வேளாண் காடு முறையை ஊக்குவிப்பது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். மண்
மற்றும் நீர் வளத்தை பெருக்குவதற்கும், மக்களின் உணவுமுறையில் ஊட்டச்சத்தை
அதிகரிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை கையாள்வதற்கும் மரம் சார்ந்த விவசாயம் எந்தளவுக்கு
பயனுள்ளதாக இருக்கும் என்பதை சத்குரு விளக்கமாக பேசினார்.
பிரதமர் அறிவிப்பு பாராட்டுக்குரியது:
இது தொடர்பாக அவர் கூறும்போது, “செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக பிரதமர்
அறிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த அறிவிப்பு
மிகவும் அவசியம். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஊட்டச்சத்து குறைவுடன் இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. நம் நாட்டில் 55 சதவீத பெண்களும், 3 வயதுக்கு குறைவான 70 சதவீதம் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கின்றனர்.
மண்ணை வளமாக வைக்க வேண்டும்:
நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து பெருமளவும் குறைந்து போனது தான் இதற்கு முக்கிய
காரணம். செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்தி மண்ணின் வளத்தை பாழ்படுத்திவிட்டோம்.
மருத்துவர்கள் என்னதான் சத்து மாத்திரைகளை கொடுத்தாலும், சத்தான உணவை உற்பத்தி
செய்யாமல் இந்த பிரச்சினையை சரிசெய்ய முடியாது. மக்கள் நலமாக இருக்க மண்ணை வளமாக
வைத்து கொள்வது தான் நம்மிடம் இருக்கும் ஒரே தீர்வு.ஆகவே, மண்ணை வளப்படுத்த மரங்கள் அவசியம்.
காவேரி கூக்குரல் திட்டம் :
அந்த அடிப்படையில் காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் 83,000 சதுர கி.மீ பரப்பளவில் 242 கோடி மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் 52 லட்சம் விவசாயிகள் பயன்பெற முடியும். 9 முதல் 12 ட்ரில்லியன் லிட்டர் தண்ணீர் கூடுதலாக சேமிக்க முடியும். 200 முதல் 300 மில்லியன் டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியீட்டை தடுக்க முடியும். கார்பன் தடத்திற்கான பாரீஸ் ஒப்பந்தம்படி நம் நாடு 2030க்குள் நிறைவேற்ற வேண்டிய இலக்கில் காவேரி கூக்குரல் இயக்கம் மட்டுமே 8 முதல் 12 சதவீதம் பூர்த்திசெய்து விடும்.இதேமுறையை இந்தியாவில் உள்ள 8 முக்கிய நதிப் படுகைகளில் செயல்படுத்தினால் 7.4 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்” என்றார்.
சத்குரு கருத்து மிகவும் அவசியம்:
மத்திய அமைச்சர் திரு.ஜவடேகர் முதலில் சத்குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவிட்டு தனது உரையை தொடங்கினார். சத்குரு மண் மற்றும் நீர் வளம் தொடர்பாக அரசுக்கு கொடுத்த அனைத்து ஆலோசனைகளையும் வரவேற்று பேசிய அவர் “அரசாங்கம் பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, மக்களிடம் அதிக தாக்கம் ஏற்படுத்த கூடிய உங்களை போன்ற நபர்களின் கருத்துக்கள் மிக அவசியம்” என்றார்.
பிரதமர் மோடி ஆர்வம்:
மேலும், அவர் பேசுகையில், “மரம் சார்ந்த விவசாய முறையை அதிகம் முன்னெடுத்து செல்வதில்
பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் மிகுந்த ஆர்வமுடன் உள்ளார். விவசாயிகள் உற்பத்தி
செய்யும் டிம்பர் மரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும்
விற்பனை செய்யவும் டிஜிட்டல் தளத்தை அரசு உருவாக்கி உள்ளது. நாட்டின் பசுமை பரப்பை
அதிகரிக்கவும், மண் வளத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு 49,000 கோடி நிதியை ஒதுக்கி
உள்ளது” என்றார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த கலந்துரையாடல் ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ –டியூப் சேனலில்களில் ஒளிப்பரப்பப்பட்டது. ஆங்கிலத்தில் நடந்த இந்த கலந்துரையாடல், தமிழ், இந்தி, மராத்தி ஆகிய 3 மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது.