சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறையில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் பொலிசார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி இம்மாத இறுதிக்குள் சிபிஐ தனது விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.
இதனால் வழக்கு விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் தடயவியல் துறை அதிகாரிகள் மற்றும் வருமானத் துறை அதிகாரிகள் என 17 அதிகாரிகள் கொண்ட குழு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டது. இக்குழு கோவில்பட்டி கிளைச் சிறையில் நேற்று விசாரணை நடத்தியது. அங்குள்ள சிறைக் காவலர்கள் மற்றும் தந்தை மகனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களை வரவழைத்து இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிறைச்சாலை ஆவணங்களில் உள்ள தகவல்களும் சரிபார்க்கப்பட்டன.