இரட்டை கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் பகுதியில் இருந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் விசாரணைக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் பின்பு அங்கு போலீசார் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் முத்துராஜ், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 பேர் இந்த வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான பால்ராஜ் என்பவர் கொரோனாவினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது மீதமுள்ள ஒன்பது பேரும் ஜாமீன் கேட்டு பலமுறை மனு தாக்கல் செய்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் வழக்கு வருகிற 1-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே சிறையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் வருகிற 1-ஆம் தேதி விசாரிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.