Categories
மாநில செய்திகள்

வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் சாத்தான்குளம் காவல்நிலையம் – செந்தூர்ராஜன் நியமனம்!

வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம் கொண்டு வரப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும், வருவாய்த்துறை அதிகாரியை சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்க வேண்டும் என நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டிற்குள் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |