சாத்தான் குளம் தந்தை-மகன் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் வழக்கு தொடர்பாக தாமாக விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம், அமர்வு சிபிஐ மற்றும் சிபிசிஐடி தரப்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுருந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சிபிசிஐடி தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன் அறிக்கை சமர்பித்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய 10 குற்றவாளிகளை குறுகியகால விசாரணையில் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சீலிட்ட அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பால் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என வழக்கறிஞர் கதிர்வேலு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு வார காலம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.