சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி உமா கணேசனுக்கு குருமூர்த்திநாயக்கன்பட்டியில் உள்ள ஓடையில் கிராவல் மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் மலர்கொடி மற்றும் ஆமாத்தூர் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அங்கு பார்த்தபோது எவ்வித அனுமதியும் இன்றி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஒரு டிராக்டரில் மணல் அள்ளி கொண்டிருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சேர்வைகாரன்பட்டி பகுதியில் வசிக்கும் முனீஸ்குமார், டிராக்டர் டிரைவர் மாரிச்சாமி, ஜேசிபி உரிமையாளரான கருப்பசாமி, டிராக்டர் உரிமையாளரான சண்முக கருப்புசாமி ஆகிய 4 பேர் மணல் அள்ளியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜே.சி.பி. இயந்திரம், டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு முனீஸ்குமார், மாரிச்சாமி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.