லாரியில் அனுமதியின்றி கல் ஏற்றி வந்த டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் காவல்துறையினர் சிப்காட் பகுதியில் நான்கு வழிச் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக கல் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் வசிக்கும் கார்த்திக் ராஜா என்பதும் அவர் அனுமதியின்றி லாரியில் கல் ஏற்றி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக் ராஜாவை கைது செய்ததோடு சட்ட விரோதமாக கடத்தி வந்த கல்லை லாரியுடன் பறிமுதல் செய்துள்ளனர்.