தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கலந்து கொண்டு பேசினார். அளித்த நேரத்தை காட்டிலும் அதிக நேரம் ஆர்ப்பாட்டம் நடந்ததாலும், அக்கூட்டத்தில் சட்டத்துக்கு எதிராக சீமான் பேசியதால் அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. நேற்று விசாரணைக்காக சீமான் கோர்ட்டில் ஆஜரானார். பின்பு இவ்வழக்கின் விசாரணை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்து அவர் பேட்டி அளித்தார். அப்பேட்டியில், நடிகரான ரஜினியின் திரைப்படங்களை யாரும் குறை சொல்லவில்லை. தமிழர்களுக்கு அரசியலில் ஒரு கோட்பாடு உள்ளது. அடிபட்டு வீழ்ந்த இனம் மீண்டு எழும்போது எங்கிருந்தோ வந்த வன வழி நடத்துவதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரஜினி திரைப்படத்தில் நிலமே எங்கள் உரிமை என்று சொன்னதையே நாங்களும் சொல்கிறோம். ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், எம்.ஜி.ஆரை பற்றி பேசியே அ.தி,மு.கவின் அனைத்து வாக்குகளையும் சேகரிப்பவர்கள். ரஜினி,கமல் ஆகியோரது ஈழம் பற்றிய நிலைப்பாடுதான் என்ன?
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கு நாம் பாடம் கற்று தருவதன் மூலம் இனி எந்த நடிகரும் அரசியலில் நுழையக் கூடாது. நடித்தால் மட்டுமே நாட்டை ஆளும் திறன் வந்துவிடாது. நான் சினிமாவிலிருந்து வந்தவனாக இருந்தாலும் ரசிகர்களை நான் சந்திக்கவில்லை, மக்களைத்தான் சந்தித்தேன். நாம் தமிழர் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னிச்சையாக நின்று போட்டியிடும். என்று சீமான் கூறினார்.
தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் நினைவு தினத்தையொட்டி போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரின் உருவ படத்திற்கு மலர் தூவி சீமான் அஞ்சலி செலுத்தினார்.