சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனலட்சுமி-மாணிக்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யபிரியா தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், அதே காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் அதிகாரி தயாளன் என்பவரின் மகன் சதீஷ் சத்யபிரியாவை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு மாணவி வழக்கமாக கல்லூரிக்கு செல்வதற்காக சென்றபோது சதீஷ் மாணவியை வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சதிஷ் ரயிலின் முன்பாக மாணவியை தள்ளிவிட்டதில் மாணவியின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர கொலையை கேள்விப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே நாளில் தந்தை மற்றும் மகள்களின் சடலத்தை பார்த்த தனலட்சுமி கதறி அழுதது பார்ப்போரின் நெஞ்சை கலங்க வைத்தது. இந்நிலையில் காவல்துறையினர் சதிஷை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவியின் கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி ஆதாரங்களை வைத்து சதீஷை 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவி சத்திய பிரியாவின் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து சதீசுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுப்போம் எனவும் சிபிசிஐடி காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.