சவுதி அரேபியாவும், பஹ்ரைன் நாடும், லெபனான் தூதர் 2 நாட்களுக்குள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஏமன் நாட்டின் அதிபரான மன்சூர் காதி தலைமையில் செயல்படும் அரசபடைகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் காரணமாக, ஏமன் நாட்டில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். ஈரான் அரசு, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.
இதேபோன்று, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் நாட்டின் அரச படைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. எனவே, சவுதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டு வருகிறது. இதனிடையே லெபனானின் தகவல் துறை மந்திரி ஜார்ஜ் குர்தான், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவர் பேசியிருந்த வீடியோ சமீபத்தில் இணையதளத்தில் வைரலாக பரவியது. இதனால் லெபனான் மற்றும் சவுதி நாடுகளுக்கிடையே உள்ள உறவில் பிரச்சினை உண்டானது. இந்நிலையில் லெபனான் நாட்டின் தகவல்துறை மந்திரி தெரிவித்த கருத்தை எதிர்க்கும் வகையில் அந்நாட்டுடனான இறக்குமதி அனைத்திற்கும் சவுதி அரேபியா தடை அறிவித்தது.
மேலும், தங்கள் மக்கள் அந்நாட்டிற்கு பயணிக்கவும் தடை விதித்திருக்கிறது. இதேபோல் லெபனான் நாட்டின் தூதர் இரண்டு நாட்களுக்குள் நாட்டிலிருந்து வெளியேறி விடவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து சவுதியின் நட்பு நாடாக இருக்கும் பஹ்ரைன் நாடும், லெபனான் நாட்டின் தூதர் தங்கள் நாட்டிலிருந்து இரண்டு நாட்களுக்குள் வெளியேறிவிட வேண்டும் என்று கூறியிருக்கிறது.