ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல இன்னல்களை சந்தித்து வரும் ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் பற்றிய சிறப்பு தொகுப்பு
கொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மனிதர்கள் படும் அவஸ்தையை விட குரங்குகள் அதிகமாகவே பட்டு வருகின்றன. மனிதர்கள் உணவு தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் ஊரடங்கினால் பசியால் மரணிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நாகரீகம் வளர வளர காடுகள் நகரங்கள் ஆகின. மனிதர்கள் அத்யாவசிய தேவைக்காக காடுகளை அழிக்கத் தொடங்கினர். அதற்கு பழிவாங்கும் விதமாக மக்களின் குடியிருப்புகளில் விலங்குகள் புகுந்தன. காடுகள் அழிய தொடங்கியதால் விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டது. தண்ணீர் கிடைக்காமல் கிணற்றுக்குள் தடம் புரளும் விலங்குகளும் அதிகம்.
சில விலங்குகள் மனிதர்கள் தூக்கி எறியும் உணவுக்காக காத்திருப்பவை. அவைகளில் முக்கியமானவை குரங்குகள். மனிதர்கள் உணவு கொடுத்து கொடுத்து பழக்கியதால் அதன் சுயத்தை இழந்த குரங்குகள் மனிதர்களை சார்ந்து வாழத் தொடங்கியது. அதிலும் சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவுக்காக வெகுநேரம் காத்திருக்கும் குரங்குகளை அனைவரும் பார்த்ததுண்டு.
சில இடங்களில் குரங்குகளுக்கு தன்னார்வலர்கள் உணவளிப்பதும் சமூகவலைத்தளங்களில் காணமுடியும். ஆனால் தற்போதைய சூழலில் ஊரடங்கு காரணமாக பொதுமக்களே உணவிற்கு வாடும் நிலையில் வாயில்லா இந்த குரங்குகள் எங்கே சென்று உணவை கேட்கும். யாராவது உணவு தருவார்களா என்று எதிர்பார்த்த வண்ணமே பல நாட்களை கடத்துகின்றன அந்தக் குரங்குகள்.
சில இடங்களில் கிடைக்கும் சிறிது உணவிற்கு ஒட்டுமொத்த குரங்கு கூட்டமும் சண்டையிட்டுக் கொள்கிறது. சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் வாழும் குரங்குகள் பசியில் உணவு கிடைக்காமல் கற்களை அள்ளி சாப்பிட்டுள்ளன. இன்னும் பல இன்னல்களை இந்த குரங்குகள் அனுபவித்து வருகின்றன. குரங்குகள் என்று கூறினாலே அவைகளின் சேட்டைகளும் குதூகலமும் தான் ஞாபகத்திற்கு வரும்.
தற்போதுள்ள நிலைக்கு இனி குரங்குகள் என்றாலே பசியால் அவை துடித்து இறந்த புகைப்படங்கள்தான் நமது ஞாபகத்திற்கு வரப்போகின்றது குரங்குகளின் அவதாரத்தில் இருக்கும் புகைப்படங்களுக்கு சிலைகளுக்கு நாம் செய்யும் அர்ப்பணிப்புகள் கூட உயிருள்ள குரங்குகளுக்கு போய் சேர்வதில்லை இனிமேலாவது இனியாவது குரங்குகளின் பாதுகாப்பிற்காக குரல்கொடுப்போம் அவைகளைப் பாதுகாக்க வழிவகை செய்வோம்