நபர் ஒருவர் தனக்கு வெங்காயம் தர மறுத்த உணவு பரிமாறியவரை குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் ரியாசத் அலி(59). கூலித் தொழிலாளியான இவர் 30 வருடங்களாக டெல்லியிலேயே தங்கி தினமும் கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திஷ்பூர் பெரி என்ற பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு கூலித் தொழிலுக்காக இவர் சென்றுள்ளார். அங்கு அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சாப்பிட கேண்டீன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு உணவருந்த சென்ற அலிக்கு, அங்கு வேலை செய்து வந்த பவன் என்பவர் உணவு பரிமாறி இருக்கிறார். அப்பொழுது அலி தனக்கு வெட்டப்பட்ட வெங்காயம் சற்று அதிகமாக வைக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு பவன் வெங்காயம் தர மறுத்துள்ளார். இதனால் இருவரும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அலி அங்கிருந்த கத்தியால் பவனை குத்தியுள்ளார். பின்பு தான் வைத்திருந்த கத்தியை மறைத்து வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அலியை தேடி பிடித்து கைது செய்துள்ளனர். அவரை கைது செய்த பிறகு தான், பவனை வெங்காயத்திற்காக கத்தியால் குத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே இதை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெங்காயம் தர மறுத்ததால் கத்தியால் குத்திய சம்பவம் தற்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.