மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் திரு.எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் திரு. எஸ்.பி பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திரு. எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகனும், பாடகருமான திரு. எஸ்.பி.பி சரண் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் தனது தந்தையால் உடலை சிறிது அசைக்க முடிகிறது என்றும் அவரால் ஓரளவுக்கு நகர முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களைப் பார்த்து தனது தந்தை கட்டை விரலை உயர்த்திக் காட்டுவதாக தெரிவித்த திரு. சரண் இன்னும் உயிர் காக்கும் மருத்துவசாதன கருவிகள் தந்தைக்கு பொருத்தப்பட்டு உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்னர் இருந்ததை விட சிறிது அளவுக்கு சௌகரியமாக அவரால் சுவாசிக்க முடிவதால் மருத்துவர்கள் இதனை சிறந்த அறிகுறியாக கருதுவதாகவும் தற்போது தந்தையின் உடல்நிலை முன்னேற்றம் அடையும் நிலையில் உள்ளதாகவும் திரு. சரண் தெரிவித்துள்ளார்.