நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் கணக்கில் இருக்கும் குறைந்தபட்ச இருப்பு குறித்த விதி ஒன்றை பற்றி கூறியுள்ளது. இதன்படி, குறைந்தபட்ச இருப்பு மற்றும் செய்தி கட்டணம் எந்த தேதியிலிருந்து இலவசமாக்கப்பட்டதோ, அதற்கு முன்னர் வாடிக்கையாளர் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்கவில்லை என்றால், அந்த தொகையை வங்கிக்கு செலுத்த வேண்டும்.
எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘குறைந்தபட்ச இருப்பு மற்றும் செய்தி கட்டணம் வசூலிக்கப்படாது என்று வங்கி அறிவித்த தேதிக்கு முன்பு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை இருந்தால், அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க’ என்று கூறியுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வாடிக்கையாளர் கணக்கில் வைத்திருக்கவில்லை என்றாலும், இது தொடர்பாக வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் இருந்தால், அதை வாடிக்கையாளர் செலுத்த வேண்டும் என ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளது.
வங்கியில் குறைந்தபட்ச இருப்பு ‘சராசரி மாத இருப்பு’ அல்லது AMB என அழைக்கப்படுகிறது. அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளின் சராசரி குறைந்தபட்ச இருப்பு வைப்பது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ கடந்த ஆண்டு அறிவித்தது. விதிகளின்படி, மெட்ரோ நகரங்களில் எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் AMB ரூ .3,000 ஆகவும், அரை நகர்ப்புறங்களில் AMB ரூ .2,000 ஆகவும், கிராமப்புறங்களில் AMB ரூ .1,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முன்னர், குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கில் இல்லை என்றால், ரூ .5-15 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்.
கடந்த மார்ச் 11, 2020 அன்று, ஸ்டேட் வங்கி சராசரி மாத இருப்பு அல்லது AMB தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது. அதாவது, வாடிக்கையாளருக்கு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்றாலும், அவர் எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்று வங்கி தெரிவித்தது. கூடுதலாக SBI, எஸ்.எம்.எஸ் கட்டணத்தையும் தள்ளுபடி செய்தது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்த குழப்பம் இருந்தது. ஆகையால், ஏற்கனவே நிலுவையில் இருந்த தொகை செலுத்தப்பட வேண்டும் என்று வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.