SBI வங்கி நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதங்களை 10 பிபிஎஸ் வரை உயர்த்தி உள்ளது. இந்த வட்டி விகிதம் ரூ2 கோடிக்கு குறைவான FDகளுக்கு பொருந்தும் எனவும், புதிய வட்டி விகிதம் ஜனவரி 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. வங்கியின் இணையத்தில் 1 ஆண்டு முதல் 2 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கான நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 5.0 சதவீதத்தில் இருந்து 5.1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற கால அளவுகளுக்கான FD மீதான வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும். SBI 5 முதல் 10 வருடங்கள் எஃப்டியில் அதிகபட்சம் 5.40% வட்டி விகிதத்தினை வழங்குகிறது. 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான FD க்கு 5.10 சதவீதமும், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு வட்டி விகிதம் 5.30 சதவீதமும் வழங்குகிறது. இந்த வைப்புத் தொகையில் மூத்த குடிமக்கள் 50 பிபிஎஸ் கூடுதலாகப் பெற்று கொள்வார்கள்.
HDFC வங்கி:
HDFC வங்கி நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தினை ஜனவரி 12ஆம் தேதி முதல் உயர்த்தி உள்ளது. 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும் நிலையான வைப்புத் தொகைக்கு 5.20 சதவீதமும், 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் வரை முதிர்ச்சி அடையும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 5.40 சதவீதமும், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு 5.60% வட்டி வழங்கப்படும். வேறு கால அளவுகளுக்கான நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.
கோடக் மஹிந்திரா வங்கி:
கோடக் மஹிந்திரா வங்கி பல தவணைக் காலங்களில் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதமானது ஜனவரி 6ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய உயர்வின்படி 7 முதல் 30 நாட்கள், 31 முதல் 90 நாட்கள் மற்றும் 91 முதல் 120 நாட்களில் முதிர்ச்சி அடையும் வைப்பு தொகைகளுக்கு முறையே கோடக் மஹிந்திரா வங்கி 2.5%, 2.75% மற்றும் 3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 2- 3 வருடங்களுக்கு குறைவாகவுள்ள FD-களுக்கு 5.15 சதவீதமும், 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கு குறைவாக 5.3 சதவீதமும், 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் உட்பட 5.3 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.