இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) அதன் அடிப்படை விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள்(bps) உயர்த்தியதன் மூலமாக தற்போது கடன் வாங்குபவர்களுக்கான கடன்கள் சிறிது விலை உயர்ந்ததாக இருக்கும். இதுகுறித்து வெளியான அதிகாரபூர்வ இணையதள அறிவிப்பின்படி SBI வங்கியின் அடிப்படை விகிதம் 10 bps அதிகரித்து உள்ளது. புதிய விகிதம் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் இந்த வங்கி அதன் அடிப்படை விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள் குறைந்த நிலையில், இது 7.45 சதவீதமாக இருந்தது. இதனிடையில் இந்திய ரிசர்வ் வங்கி(RBI) அடிப்படை விதங்களில் தற்போதைய நிலையைத் தொடர முடிவு செய்வதாக அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்புகள் வெளியான சில தினங்களுக்கு பிறகு SBI வங்கி அதன் அடிப்படை விகிதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுத்து உள்ளது. அந்த அடிப்படையில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியன்று அடிப்படை விகிதங்களில் தற்போதைய நிலையைப் பராமரிக்கும் முடிவை RBI அறிவித்தது.
இதன் அடிப்படையில் ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் முறையே 4 சதவீதம் மற்றும் 3.35 சதவீதமாக உள்ளது. இதனையடுத்து டிசம்பர் 15-ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ள SBI வங்கியின் அடிப்படை புள்ளிகளை தொடர்ந்து 2 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள நிலையான வைப்புத்தொகைகளின் வட்டியையும் இந்த வங்கி உயர்த்தி உள்ளது. அந்த அடிப்படையில் 2 கோடி ரூபாய்க்கும் குறைவான நிலையான வைப்புத் தொகையின்(FD) வட்டி விகிதங்கள் மாற்றம் இல்லாமல் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.