இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கல்வி உதவி தொகையை ரத்து செய்துள்ளது. கடந்த 2008-09 கல்வியாண்டில் ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில், திடீரென ஒன்றிய அரசு உதவி தொகையை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் இந்த திட்டத்தின் படி 2022-23 ஆம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4,49,599 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 86.76 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒன்றிய அரசானது சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகையை நிறுத்தியதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு கல்வி உதவி தொகையானது பெருமளவில் உதவும். இந்த கல்வித்தொகை ஏராளமான குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதால் ஒன்றிய அரசானது கல்வி உதவித் தொகையை நிறுத்திய உத்தரவை மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் வழக்கம் போல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்க மத்திய அரசானது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.