பள்ளிக்கு வந்த காவல் அதிகாரிகள் சிறுவன் ஒருவனின் கையில் விலங்கை மாட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் பயிலும் 8 வயது சிறுவன் தனது இருக்கையில் அமராமல் சேட்டை செய்து வந்துள்ளான். அவனிடம் ஆசிரியர் சரியாக அமர வற்புறுத்தியும் சிறுவன் எனது தாய் வந்து உன்னை அடிப்பார் என கூறி அவனது ஆசிரியை நெஞ்சில் குத்தி உள்ளான். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த காவல் அதிகாரிகள் அச்சிறுவனை அழைத்து நீ ஜெயிலுக்கு போக போகிறாய் அதனால் எழுந்து உன் கைகளை பின்னால் கட்டு எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து அச்சிறுவன் திரும்பி நின்று அவனது கைகளைப் பின்னால் கட்ட காவல் அதிகாரி அவனது கையில் விலங்கை மாட்டுகிறார். ஆனால் அவனது கை சிறிதாக இருந்ததால் விலங்கு நழுவிக் கீழே விழுகின்றது. பின்னர் அவனை அழைத்து செல்லும் காவல் அதிகாரி அவனிடம் “நான் இப்படி செய்ய வேண்டியுள்ளது. எனக்கு வேறு எந்த வழியும் இல்லை. நீ செய்தது மிகவும் தவறான விஷயம். இதனைப் புரிந்துகொண்டு இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இதே தவறை மீண்டும் செய்ய கூடாது” என கூறியுள்ளார். அதற்கு அச்சிறுவன் அழுது கொண்டே தலையை மட்டும் ஆட்டியுள்ளான்.
பெரியவர்கள் அடைக்கப்படும் சிறையில் சிறுவர்களை கைது செய்து சிறிது நேரம் அடைக்கப்படுவது scared straight என்னும் ஒரு வித நடைமுறையாகும். தவறு செய்பவர்களுக்கு சிறை என்றால் இப்படித்தான் இருக்கும் என்றும் இனி குற்றங்கள் செய்யக்கூடாது என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு செய்வதுண்டு. சிறுவனை பொருத்தவரை அவன் சிறைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. அவனிடம் அதிகாரிகள் சிறைக்கு போவதாக கூறியதோடு விலங்கு மாட்ட முயற்சித்துள்ளனர் அவ்வளவுதான். ஆனால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் காவல் அதிகாரியால் கொல்லப்பட்டதை அடுத்து இதுபோன்ற காணொளிகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது.