பள்ளி வேன் மோதிய விபத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் இப்பகுதியில் முகமது சுகைப் என்ற மாணவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக முகமது தனது நண்பர் மோக்சின் கமில் என்பவருடன் ரெகுநாதபுரம் சென்றுள்ளார். இவர்கள் சேது நகர் சலவைத் தொழிலாளர் சங்கம் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த பள்ளி வேன் இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்புல்லாணி போலீசார் விபத்திற்கு காரணமான தப்பியோடிய வேன் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.