Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கு கொரோனா… மூடப்பட்ட பள்ளிகள்… கட்டாயப்படுத்தும் நிர்வாகம்…!!

ஆசிரியராக பணிபுரியும் தம்பதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2  பள்ளிகள் மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மேரிஸ் ஹில் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது. மேலும் மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை அடுத்து தம்பதிகள் இருவரையும் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் பள்ளிக்கு சென்று பாடம் நடத்தியதால், சக ஆசிரியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தினால் சுகாதாரத்துறையினர் இரண்டு பள்ளிகளிலும் முகாமிட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என மொத்தம் 200 பேரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளதால் சம்பந்தப்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்களது செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அரசு உதவி பெறும் ஒரு பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதால் இந்த விவகாரத்தை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பள்ளிகளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இரண்டு அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |