வீட்டு வேலை செய்யுமாறு தாயார் கண்டித்ததால், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவம்பாளையம் வஞ்சிபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கலாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் இடுவாய் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தைப்பூச நாளை முன்னிட்டு கலாமணி அவரது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன்னுடன் சேர்ந்து வீட்டின் வேலைகள் சிலவற்றை பார்க்குமாறு அவரது மகளிடம் கூறியுள்ளார். ஆனால் தனுஸ்ரீ வேலை செய்யாமல் செல்போனைப் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த கலாமணி தனது மகளை கடுமையாக திட்டி இருக்கிறார்.
அதன்பின் தனுஸ்ரீ தனது வீட்டின் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார். இதனையடுத்து கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் ஜன்னல் வழியே பார்த்த போது, தனுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதனைதொடர்ந்து அருகில் இருப்பவர்கள் உதவியோடு தனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனுஸ்ரீ இறந்தது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.