காணாமல் போன 14 வயது மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து பச்சையப்பன் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 17 வயதுடைய சிறுவன் தனது மகளை கடத்திச் சென்றுள்ளதாக பச்சையப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் ரம்யாவின் சடலமானது வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ரம்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டனர். அதன் பிறகு மாணவியை சில வாலிபர் கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனர் எனவும், குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செஞ்சி-திண்டிவனம் சாலையில் ரம்யாவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது காவல்துறையினர் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து ரம்யாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 7 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.