தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் வருகிற 28-ஆம் தேதி கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கூட்டத்தின் போது மேலாண்மை, கட்டமைப்பு, கற்றல், தக்க வைத்தல் மற்றும் மாணவர் சேர்க்கை போன்றவற்றை உள்ளடக்கி பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரிக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேலாண்மை குழு கூட்டத்தின் போது எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் விவாதிக்கும் விஷயங்கள் குறித்து நவம்பர் 1-ம் தேதி நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியர் எடுத்துரைக்க வேண்டும். இதில் கிராம சபை பஞ்சாயத்துடன் தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்தின் போது கற்றல் மற்றும் வளர்ச்சி சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றி பள்ளியின் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும்.
இந்த கூட்டத்தை எப்படி நடத்துவது, யார் நடத்துவது போன்ற அனைத்து விதமான வழி முறைகளும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் மேலாண்மை குழு செயல்பாடுகள் மற்றும் வருகை பதிவேடுகள், தீர்மானங்கள் போன்றவற்றை ஒருங்கிணைந்த பள்ளி கல்விக்கு ஆன்லைன் மூலம் செயலி வழியாக அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.