தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி கருணாகரன். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்ற மகளும், தாம்ஆண்ட்ரூஸ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மரிய ஐஸ்வர்யா அரசு உதவி பெறும் வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஐஸ்வர்யா, மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மரிய ஐஸ்வர்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். பள்ளியில் ஆசிரியர்கள் மாணவிக்கு கடுமையான தண்டனைகளை வழங்கியதால் தான், மனமுடைந்து மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி இன்று மாணவியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்து வரும் கனக ரத்தினமணியை தற்கொலைக்குத் தூண்டுதல், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டது உட்பட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தலை மறைவான மற்றொரு ஆசிரியர் ஞானபிரகாசத்தை போலீசார் தேடி வருகின்றனர்.