வருகின்ற 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடங்களை திறக்க முடியாத நிலை உருவானதால் ஜூன் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று படிபடியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. எனவே பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் பள்ளிகள் திறப்பதற்கு ஒரு சில பெற்றோர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியானது ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டாவது முறையாக பெற்றோர், மாணவர்களுடன் கருத்து கேட்கும் கூட்டமானது கடந்த வாரம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளை திறப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வருகின்ற 19ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், தமிழ்நாட்டில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அதோடு அம்மாவின் அரசானது மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து உரிய நிவாரணம் அளித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து 28.12.2020 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்த பின்பும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து ஜனவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கூட்டங்களில் பள்ளிகளை திறக்குமாறு பெரும்பான்மையான பெற்றோர்கள விருப்பப்படுவதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு வருகின்ற 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு நெறிபடுத்திய தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம், துத்தநாக மாத்திரைகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்க சுகாதாரத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை தந்து உதவுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.