விருதுநகர் மாவட்டத்தில் மேலப்பரளச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் தவறு செய்த மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதற்கு உடன்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அது மட்டுமல்லாமல் பள்ளியின் தலைமையாசிரியர் இடமாற்றம் செய்ய கோரியும் பெற்றோர்கள் வலியுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.