கள்ளக்குறிச்சியில் 10′ ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நுவரை கிராமத்தில் வசித்து வந்த கூலித்தொழிலாளியின் மகள் சின்ன சேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கணிதம் தேர்வு எழுதி விட்டு வழக்கமாக விடுதிக்கு சென்ற மாணவி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் பள்ளி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 150-க்கும் மேற்பட்டோர்கள் பள்ளியின் நிர்வாகத்தை கண்டித்து சின்ன சேலம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் மாணவியின் இறப்பிற்கு சரியான பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் பள்ளிக்குள் சென்று மாணவர்கள் பயன்படுத்தும் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தி அடித்து நொறுக்கினர்.
இதனையடுத்து விரைந்து வந்த சின்னசேலம் காவல் துறையினர் மாணவியின் பெற்றோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பள்ளி நிர்வாகத்திடம் மாணவியின் இறப்புகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.