10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் இல்லாத பள்ளிகளும் இருக்கும் நிலையில், அரசின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொரோனோ தாக்கம் காரணமாக தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 100க்கு மேற்பட்ட மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11ம் வகுப்பு தேர்வுக்கான தேர்வு மையங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல்வேறு பள்ளிகள் கொரோனா தடுப்பு மையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த மையங்களில் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்க கூடாது என கோரிக்கை எழுந்துள்ளதால் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு தேர்வு அறையில்10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதல் மையங்கள் தேவைப்படுகிறது.