ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை மீது டிராக்டர் மோதியதில் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள நல்லான் பட்டினம் கிராமத்தில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வர்ஷினி என்ற மகளும், விஷ்ணுவர்தன் என்ற மகனும் இருக்கின்றனர். ராஜேஸ்வரி புவனகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனது மகளுடன் ஸ்கூட்டரில் புவனகிரியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரியின் ஸ்கூட்டர் மீது மோதி விட்டது.
இதனால் தூக்கி வீசப்பட்ட ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதோடு அவரது மகள் வர்ஷினி பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு புவனகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.