ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள பட்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சித்ரா . இவர் நேற்று முன்தினம் திருவாய்மூரில் உள்ள கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனது மகன் ரஞ்சித்குமாருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரை மகன் ரஞ்சித்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தேவூர் மெயின் ரோட்டில் உள்ள அய்யடிமங்கலம் சந்திப்பின்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த சித்ரா தவறிக் கீழே விழுந்துள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.