டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து அணி..
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்படும். இந்நிலையில் இன்றைய 7ஆவது தகுதி சுற்றுப்போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது.
இதில் ஸ்காட்லாந்து அணி முதலில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இருந்தது. அதே சமயம் அயர்லாந்து அணி ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்வதாக தெரிவித்தது. அதன்படி ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சி – மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் களம் கண்டனர். இதில் ஜார்ஜ் முன்சி 2ஆவது ஓவரில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் மேத்தியூ கிராஸ் – மைக்கேல் ஜோன்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து நல்ல சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
இதில் ஜோன்ஸ் அதிரடியாக ஆடினார். இதையடுத்து மேத்தியூ கிராஸ் 28 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின் வந்த ரிச்சி பெரிங்டன் அவர் பங்குக்கு 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதேசமயம் தொடக்க வீரர் ஜோன்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 19ஆவது ஓவரில் 55 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) உட்பட 86 ரன்கள் எடுத்திருந்த மைக்கேல் ஜோன்ஸ் அவுட் ஆனார். கடைசியில் மைக்கேல் லீஸ்க் 17 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கர்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதை எடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பால் ஸ்டிர்லிங் 8 ரன்கள் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி 14 ரன்களில் அவுட் ஆகினர். அதன் பின் வந்த லோர்கன் டக்கர் 20 ரன்கள், ஹாரி டெக்டர் 14 ரன்கள் என அடுத்தடுத்து அவுட் ஆனதால் அயர்லாந்து அணி 9.3 ஓவரில் 61 /4 என தடுமாறியது. அப்போது கர்டிஸ் கேம்பர் மற்றும் ஜார்ஜ் டோக்ரெல் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடனும் அதே நேரத்தில் சிறப்படனும் விளையாடி ரன்களை சேர்த்தனர்..
இதில் கேம்பர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அதேபோல ஜார்ஜ் டோக்ரெலும் அவருக்கு நல்ல கம்பெனி கொடுத்தார்.. இருவரும் விக்கெட் கொடுக்காமல் ஆடிய நிலையில், இறுதியில் அயர்லாந்து அணிக்கு 3 ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. பின் 2 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட 19ஆவது ஓவரிலேயே 3 பவுண்டரி உட்பட 15 ரன்கள் எடுத்து வென்றது.
இறுதியில் அயர்லாந்து அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. கேம்பர் அதிரடியாக 32 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 72 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.. அதேபோல ஜார்ஜ் டோக்ரெல் 27 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் தகுதிச்சுற்று போட்டியில் தனது முதல் வெற்றியை அயர்லாந்து அணி பதிவு செய்துள்ளது.
Some magnificent scenes after Ireland's memorable win against Scotland 📸 #SCOvIRE | #T20WorldCup pic.twitter.com/fUKUJJkXhD
— ICC (@ICC) October 19, 2022