காப்பான் படம் குறித்த சிறிய முன்னோட்ட தகவல்கள் மற்றும் விமர்சனங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
இன்று பல சட்டச் சிக்கல்களுக்கு பிறகு காப்பான் திரைப்படமானது திரைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் என்னவென்றால் இதன் முன்னோட்ட காட்சிகள் ஒரு அரசியல் சார்ந்து இருப்பது தான். அதன்படியே காப்பான் திரைப்படம் முழுக்க முழுக்க பொலிடிக்கல் திரில்லர் திரைப்படம் தான். இதில் முக்கிய கதாபாத்திரமாக நடிகர் சூர்யா, மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா, மற்றும் சாயிஷா சைகல் போமன் இரானி உள்ளிட்ட பிரபல கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.
அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை திறம்பட நடித்து உள்ளனர் என்றே கூறலாம். இதில் நடிகர் சூர்யா பிரதமருக்கு பாதுகாவலராகவும், மறுபுறம் தஞ்சாவூர் விவசாயியாகவும் நடித்துள்ளார். இதையடுத்து மோகன்லால் பிரதமராகவும், கதாநாயகியான சாயிஷா சைகல் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிபவராகவும், ஆர்யா பிரதமரின் மகனாகவும் பின் வரக்கூடிய கதைகளில் பிரதமராகவும் நடிக்க, இராணி கார்ப்பரேட் கிரிமினல் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். காப்பான் கதையை பொறுத்த வரையில் தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் இருக்கக்கூடிய பிரச்சனைகளான மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு விவசாயிகள் எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை அழிப்பதற்கு வில்லன் தீட்டும் திட்டங்களை நடிகர் சூர்யா, ஆர்யா மற்றும் மோகன்லாலுடன் இணைந்து எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பதே காப்பான் கதையாக திகழ்கிறது. படம் முழுமைக்கும் ஆக்ஷன் ஒருபுறமிருக்க ஆங்காங்கே இந்திய மக்களை பெருமைப்படுத்தியும், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை ஊக்கப் படுத்தும் விதமாகவும் தத்துவங்களும் வசனங்களும் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடையேயும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.