இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், இருவர் உயிரிழந்ததால் மயிலாடுதுறையில் பதற்றம் நிலவுருகிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அந்த ஊராட்சி கிராமத்தின் நாட்டாமையாக உள்ளார். அரசியல் கட்சி ஒன்றின் செயலாளராகவும் அவர் இருக்கிறார்.ஆனால் அவர் நாட்டாமையாக இருக்க தகுதி இல்லை என்று , அதே பகுதி வேல்முருகன் மற்றும் அவரது தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு, இளங்கோவனும் அவரது தரப்பினரரும் அப்பகுதியில் உள்ள கோவில் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது வேல்முருகன் தரப்பினர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இளங்கோவன் தரப்பினரை ஓட ஓட விரட்டித் தாக்கியுள்ளனர். இதில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது.ரத்தம் சொட்ட சொட்ட அரிவாள் காயங்களுடன் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மேலும் 6 பேர், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .இதன்காரணமாக, நீடூரில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.