கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளை பெருநகராட்சி ஆணையர் பூட்டி சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மல்லிகை, சலூன், துணி, எலக்ட்ரானிக்ஸ் ஆகிய கடைகள் ஏ.சி இல்லாமல் செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரத்தின் பெருநகராட்சி பகுதிகளில் ஊரடங்கின் விதிகளை மீறி பல்வேறு கடைகள் திறக்கப் பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார் வந்துள்ளது.
அந்தப் புகாரின் பேரில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள பெருநகராட்சி ஆணையருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பின்னர் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் காஞ்சிபுரத்தில் உள்ள செங்கழுநீரோடை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த ஆய்வின் போது ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விதிகளை மீறி செயல்பட்ட 25க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்துள்ளனர்.
மேலும் கடை உரிமையாளர்களுக்கு 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து பெர நகராட்சி ஆணையர் எச்சரிக்கை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள் ஊரடங்கு விதிகளை மீறி திறந்து சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளுக்காக விற்பனை செய்து வந்ததால் காஞ்சிபுரத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.