Categories
மாநில செய்திகள்

உதிர்ந்து விழும் கட்டடம்…. குடிசையில் இருந்தாலாவது மக்கள் உயிரோடு இருப்பார்கள்… சீமான் கண்டனம்..!!

கே.பி பூங்கா கட்டடம் உதிர்ந்து விழும் நிலையில், குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்..

சென்னை புளியந்தோப்பு கே.பி பூங்கா கட்டடம் தொட்டாலே உதிரும் வகையில் தரமற்ற வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது.. இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு என்று அழைத்துச்சென்று, அதுவும் இல்லாமல் செய்துவிடாதீர்கள் பெருமக்களே!

சென்னை மாநகரப் பூர்வக்குடிகளுக்கு மாற்றுக் குடியிருப்பாக புளியந்தோப்பு பகுதியில் வழங்கப்பட்ட கேபி.பார்க் அடுக்ககத்தின் கட்டுமானம் மிக மோசமான நிலையில் இருக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அக்கட்டிடம் மிகப் பலவீனமாக இருப்பதும், கான்கிரீட் காரைகள் தொட்டாலே உதிர்ந்து விழுவதுமான காட்சிகள் ஆளும் அரசுகளின் நிர்வாகச் சீர்கேட்டினை  அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.

ஒரு வீட்டிற்கு 15 லட்சம் வீதம் என செலவீனத்தை மதிப்பிட்டு விட்டு தரமற்ற வீட்டை கட்டி முறைகேடு செய்திட்ட முந்தைய அதிமுக அரசின் மோசடி தனத்தையும் கட்டிடத்தின் தரத்தை கூட பரிசோதிக்காமல் மக்களை அவசரகதியில் குடியேற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கையும்  வன்மையாகக் கண்டிக்கிறேன்.

குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு என்று அழைத்துச் சென்று அதுவுமில்லாமல் செய்துவிடாதீர்கள் பெருமக்களே! 2016ஆம் ஆண்டு நடந்த முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு விபத்து அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு நமக்கு பெரும் படிப்பினையாக இருக்கிறது. மீண்டும் அதுபோல் ஒரு கோர விபத்து நிகழ்ந்து விடக்கூடாது.

ஆகவே உடனடியாக மக்களை அங்கிருந்து வெளியேற்றி அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும், அடுக்ககத்தை தரமற்றதாக கட்டி மக்கள் உயிரோடு விளையாடும் கொடும் செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்..

 

Categories

Tech |