இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே நாடு திரும்பியிருக்கும் நிலையில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். எனவே, அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டிலிருந்து தப்பினார்.
மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சில நாட்கள் தங்கிவிட்டு தாய்லாந்துக்கு சென்று விட்டார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு பின் மீண்டும் தாய் நாட்டிற்கு திரும்பிய அவரை ஆளும் கட்சியை சேர்ந்த மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்கள்.
தற்போது, அவரை விஜிர்மா மாவதா அருகில் அமைந்துள்ள அரசாங்கத்தின் பங்களாவில் தங்க வைத்துள்ளனர். அரசின் மீதான மக்களின் கோபம் தற்போது வரை அடங்கவில்லை. எனவே, அவர் தங்கியிருக்கும் பங்களாவை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.