சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளை உதவி கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி, மாவடி, மலையடிப்புதூர், மகிழடி, ராஜபுதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் அப்பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. இந்நிலையில் சேதமடைந்த வாழைகள் ஏத்தன் ரத கதலி வகைகளை சேர்ந்த 8 மாத வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகள் சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சேரன்மகாதேவி உதவி கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி திருக்குறுங்குடி பகுதிக்கு நேரில் சென்று சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் கூறுவதாவது, சேதமடைந்த வாழைகள் குறித்து கணக்கிடும் பணி நடந்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அப்போது நாங்குநேரி தாசில்தார் இசக்கி பாண்டி, மகிழடி கிராம நிர்வாக அதிகாரி ராஜரத்தினம் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.