அம்மாவின் அரசுக்கு தினந்தோறும் மக்கள் செல்வாக்கு கூடுகிறது என்று எதிர்கட்சியினர் மனம் பதைபதைக்கிறார்கள் என துணை முதல்வர் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவி இருக்கின்ற பொழுது புரட்சித் தலைவர் அவர்கள் கூறுவார். நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதனை செய்துவிட வேண்டும் என்று புரட்சித் தலைவர் அவர்கள் ஆணித்தரமாக கூறுவார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கூறிய அந்த சுந்தரச் சொற்களை தாரக மந்திரமாக கொண்டு ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற எண்ணில்லா புதுமை திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அந்த வைர வரிகளை இதயத்தில் ஏந்தி மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் இம்மியும் பிசகாது, நடந்து மக்களுக்கான நலத்திட்டங்களை அம்மா அவர்கள் அரசு இன்றைக்கு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது என்பதற்கு சாட்சி தான் மாநில அரசு பெற்றுள்ள இத்தனை தேசிய அளவிலான விருதுகளும், பாராட்டுகளும்.
கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மாண்புமிகு அம்மா அவர்களது அரசு அனைத்து துறைகளிலும் ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து, தமிழக மக்களுடைய பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. அம்மாவின் அரசு கோடிக்கணக்கான தமிழக மக்களை நம்பி கழகத் தொண்டர்களின் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதில் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது என்பதை நாம் நன்றாகவே அறிவோம்.
அதனால்தான் தமிழக மக்கள் இன்றும் எங்கள் பக்கம், நாங்கள் என்றும் மக்கள் பக்கம் என்பதனை இன்று நான் சுட்டிக்காட்ட கடமை பட்டு இருக்கின்றேன். இந்த சாதனைகளையெல்லாம் தமிழக மக்கள் பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள், மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினரும் இதைப் பார்க்கிறார்கள். ஆனால் பரிதவிக்கிறார்கள்.
மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு தினந்தோறும் மக்கள் செல்வாக்கு கூடுகிறது என்று மனம் பதைபதைக்கிறார்கள். அதனால் மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறார்கள், குறை சொல்கிறார்கள், குற்றம் சொல்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.