ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் வெளிநடப்பு செய்த இந்திய அரசு தொடர்பாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இனப்படுகொலை குறித்து விசாரிப்பதற்காக தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை இந்திய அரசு ஆதரிக்காமல் அங்கிருந்து வெளிநடப்பு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசு தமிழர்களுக்கு ஆதரவாக இருக்காமல் சிங்களர்களுக்கு ஆதரவாக இருந்து ஈழப்படுகொலையை மறைக்க துணை போவது கண்டனத்துக்குரியது.
பிரான்ஸ், ஜெர்மனி,பிரிட்டன் போன்ற அந்நியநாடுகள் கூட ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக நிற்கின்றது. ஆனால் இந்தியா அதனை ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்வது உலகமெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மறைந்த அம்மா ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் இனப்படுகொலை செய்து வரும் இலங்கை பேரினவாத அரசு மீது தகுந்த பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.
அவரது வழியில் செயல்படுவதாக கூறி வரும் தற்போதைய அதிமுக அரசு இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக செயல்படாமல் பாஜக அரசுடன் இணைந்து சிங்கள அரசுக்கு ஆதரவாக துணை நிற்பது தமிழர்களின் முதுகில் குத்தும் மிகப்பெரிய துரோகம். இந்த குற்றத்தை உலகத் தமிழர்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். எனவே பாஜகவையும் அதனை தூக்கி சுமந்து கொண்டிருக்கும் அதிமுகவையும் இந்த சட்டமன்ற தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போம் என்று நான் சூளுரைக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்த இனவிரோத பாஜகவையும் அதனைத் தூக்கிச் சுமந்து வரும் அதிமுகவையும் தேர்தல் களத்தில் பழிதீர்த்து வீழ்த்தி முடிப்போம்!https://t.co/O7kP57WMNJ pic.twitter.com/JxSzLv6xMI
— சீமான் (@SeemanOfficial) March 26, 2021