உலக கோப்பையில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி. தோல்வியை ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் விட்ட தந்தை. சிறுவயதில் தன்னை பாதித்த இந்த சம்பவத்திற்கு பின்னரே கிரிக்கெட் உலகிகை தனது இலட்சியமாகக் கொள்வார் கனா பட நாயகி. அதற்காக அவர் சந்தித்த தடைகளும், அவமானங்களும் ஏராளம். சினிமாவில் நடந்த இந்த விஷயங்கள் எல்லாம் தற்போது நிஜத்தில் நடந்து வருவது தான் சுவாரசியம்.
ஷபாலி வர்மா 16 வயதாகும் இவர் , ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார். இவரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் வயது அப்படியே சச்சினை ஞாபகப் படுத்துவதாக பலரும் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வரும் வேளையில் , அதிரடியில் தான் ஒரு சேவாக் என்று நிரூபித்து வருகிறார் .
ஷபாலி வர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அசத்திய இவர் , வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மற்ற வீராங்கனைகள் சொதப்பிய போதும் , அதிரடி நாயகியாக 17 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் விளாசி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் ஆட்டநாயகி விருதைப் கைப்பற்றினார். இவரது துணிச்சலான அதிரடி ஆட்டம் தங்கள் மீதான அழுத்தத்தை குறைத்து உள்ளதாக தெரிவிக்கின்றனர் கேப்டன் ஹர்மன்பிதி கவூர் , ஸ்மிருதி மந்தனா போன்ற நட்சத்திர வீராங்கனைகள்.
ஒரு கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டு கனவைத் தொலைத்தவர் ஷபாலியின் தந்தை. ஆனால் எப்படியாவது தனது மகனை கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். ஆனால் அவருக்கும் அது கைகூடாத நிலையில் தந்தை மற்றும் சகோதரர் இருவரின் கனவையும் இன்று நினைவாகி உள்ளார் ஷபாலி வர்மா .
தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாட சென்றபோது பெண் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்பு ஷபாலி வர்மா கூந்தலை வெட்டி , ஒரு ஆணைப் போல தன்னை மாற்றிக்கொண்டு , சக வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். ஆண்களையே அலற விடும் இவரது தனித்துவமான ஆட்டத்தை கண்டு வியந்த ஹரியானா கிரிக்கெட் சங்கம், இவரை மாநில அளவிலான போட்டிகளில் விளையாட ஊக்குவித்தது. அங்கும் தனது பெயரை தடம் பதித்ததால் விரைவில் இந்திய அணிக்கு தேர்வான இவர் 15 வயதில் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் சுமார் கால் நூற்றாண்டு காலமாக முறியடிக்க முடியாத சச்சின் சாதனையை தகர்த்தார்.
இதேபோல் உலக கோப்பையிலும் தனது மிரட்டலான ஆட்டத்தால் அவைவரது கவனத்தையும் தன்னை நோக்கி ஈர்த்துள்ளார் இந்த இளம் நாயகி. இந்திய அணிக்கு ஒரு சிறந்த பிளையேர் கிடைத்து விட்டதாக புகழாரம் சூட்டுகின்றனர் சேவாக் போன்ற ஜாம்பவான்கள். இதனால் வரும் போட்டிகளில் ஷபாலி வர்மா மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.