காபூலிலுள்ள விமான நிலையத்திற்கு செல்லும்போது ஆப்கானிய மக்கள் எந்தெந்த சிக்கல்களை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பது தொடர்பான செய்தியை சேகரிக்கச் சென்ற சர்வதேச பத்திரிகையாளர் உட்பட சேனல் குழுவினர்களை தலிபான்கள் துப்பாக்கியால் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான்கள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் ஊடக நிறுவனமான CNN னிலிருந்து சர்வதேச பெண் செய்தி சேகரிப்பாளர் ஒருவரும், ஊடக குழுவினர்களும் சேர்ந்து செய்தி ஒன்றை சேகரிப்பதற்காக பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அந்த செய்தியாவது, காபூலில் இருக்கும் விமான நிலையத்திற்கு ஆப்கானிஸ்தான் பொதுமக்களும், அமெரிக்க வாசிகளும் செல்லும்போது வழியில் எந்தவிதமான சிக்கல்களையெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதாகும். இதனால் செய்தி சேகரிக்கச் சென்ற CNN குழுவினர்களை சுற்றி பொதுமக்கள் கூடியுள்ளார்கள்.
இதனைக் கண்டு மிகவும் கடுமையாக கோபமடைந்த தலிபான் பயங்கரவாதிகளில் ஒருவர் துப்பாக்கியைக் கொண்டு கூட்டமாக கூடியிருந்த பொதுமக்களை விரட்டியடித்துள்ளார். அதோடு மட்டுமின்றி செய்தி சேகரிக்கச் சென்ற CNN குழுவினர்களையும் தலிபான்கள் துப்பாக்கியினால் தாக்குவதற்கு முயன்றுள்ளார்கள்.