சிவகங்கை மாவட்டம் முழுவதும் நேற்று தேவை இல்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்ததோடு, மீண்டும் இவ்வாறு வெளியில் சுற்றி திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் பகல் 10 மணிக்கு மேல் நேற்று காவல்துறையினரின் எச்சரிக்கையை மீறி காரணம் இல்லாமல் சுற்றித் திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதன்படி 27 இருசக்கர வாகனங்கள் சிவகங்கை போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு கார் உட்பட 22 இருசக்கர வாகனங்கள் காரைக்குடி சப்-டிவிசன் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 27 இருசக்கர வாகனங்கள் திருப்பத்தூர் போலீஸ் சப்-டிவிசன் பகுதியிலும், 18 இருசக்கர வாகனங்கள் தேவகோட்டை போலீஸ் சப்-டிவிசன் பகுதியிலும், 11 இருசக்கர வாகனங்கள் மானாமதுரை போலீசார் சப்-டிவிசன் பகுதியிலும் என மொத்தம் 105 வாகனங்கள் சிவகங்கை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.