சேலத்தில் நேற்று தனியார் உணவகத்தில் நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டியில் பரோட்டா பிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் பரோட்டாவிற்கு முதலிடம் உண்டு. மைதா மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் மக்களுக்கு பரோட்டாவின் மீது உள்ள ஆசை குறையவில்லை. மேலும் எண்ணெய் பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா போன்றவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏத்தாப்பூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பரோட்டா பிரியர்கள் பலர் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்பாக போட்டியாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொண்டனர். போட்டியின் விதிகளின்படி பத்து நிமிடத்திற்குள் 15 பரோட்டா முழுமையாக சாப்பிட வேண்டும். இப்போட்டியில் தோல்வி அடைந்தால் சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணத்தை கொடுக்க வேண்டும். மேலும் இப்போட்டியில் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால்அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
பரோட்டா சாப்பிட்டு போட்டியில் வெற்றி பெற்றால் அவர் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் கொடுக்க வேண்டாம். மேலும் அவருக்கு நிர்வாகம் சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று உணவக உரிமையாளர் அறிவித்தார். பரோட்டா சாப்பிடும் போட்டி நேற்று குறித்த நேரத்தில் தொடங்கியது. போட்டியில் கலந்துகொண்டு பரோட்டா பிரியர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு நேரம் கடந்து செல்வதை பார்த்துக் கொண்டே அதி வேகமாக சாப்பிட்டனர். போட்டியின் முடிவில் 14 பரோட்டா உண்டு இளங்கோ என்பவர் முதல் பரிசை பெற்று சென்றார். மேலும் 13 பரோட்டாக்களை உண்டு இரண்டாம் பரிசை ஸ்ரீதர் என்பவர் பெற்றுச் சென்றார்.