நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வியையும் முடக்கியது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய 8 மாதங்களாகியும் கல்வி நிலையங்கள் குறித்தும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே தற்போது தளர்வுகள் அறிவிக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் பள்ளி – கல்லூரி திறப்பு குறித்து தேதியை அறிவித்து வருகின்றன. அதேபோல தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி வருகிறது.
தொலைதூர கல்வி பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் நவம்பர் 9ஆம் தேதி முதல் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் மாதம் நடைபெறவிருந்த தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் தேர்வு எழுதலாம் என்றும், அரியர் மாணவர்களுக்கு நவம்பர் 9ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என்றும் பதிவாளர் அறிவித்துள்ளார். மேலும் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.