செல்போன் பேசி கொண்டிருக்கும்போது மாடியிலிருந்து தவறி விழுந்த நிதி நிறுவன அதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நியூ தமிழ் நகர் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கரூரில் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். இதனால் ராமலிங்கம் ஈரோடு மாவட்டம் திருவிக நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து வாரத்தில் 2 நாட்கள் தங்கியிருந்து பணம் வசூல் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலிங்கம் தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ராமலிங்கம் கால் தவறி திடீரென 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை கண்டு அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து ராமலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமலிங்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.