திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணி நடத்திய இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த போராட்டத்தைஇளைஞர் அணி , மாணவரணி சார்பாகவும் நடத்த வேண்டும் என்று எனக்கும், அண்ணன் எழிலரசன் அவர்களுக்கும் ஆணையிட்டார்கள். நேற்று முன்தினம் தான் நாங்கள் இருவரும் சேர்ந்து அறிக்கையை வெளியிட்டோம்.
ஒரே நாளில் இவ்வளவு பெரிய கூட்டத்தை, இவ்வளவு பெரிய எழுச்சியை இங்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி சார்பாகவும், மாணவர்கள் அணி சார்பாகவும் நாங்கள் உங்களுக்கு காட்டி இருக்கிறோம். ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்களே, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்களே… ஆர்ப்பாட்டம் தான் நடத்திருக்கிறோம். இதைப் போராட்டமாக மாற்றுவோமா, இல்லையா என்பது உங்களுடைய கைகளிலே உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முக்கியமான கொள்கைகளில் ஒன்று இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்பதே கொள்கை. அதிலிருந்து நாங்கள் சற்றும் விலக மாட்டோம், விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களுடைய மாநில உரிமைகள். அது நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எப்பொழுதுமே எங்களுடைய தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார் என தெரிவித்தார்.